- வாய்மையே வெல்லும்
காதல் என்பது கண்ணுக்குத் தெரிந்தே அகப்பட்டுக் கொள்ளும் வலை! இந்த வலையிலிருந்து உருமாற்றமின்றி எவரும் வெளியேறியதாக சரித்திரமே இல்லை. எப்போதோ தோன்றினாலும் வோட்டுக்கள் அதிகம் விழுவது இந்த தொகுதிக்கே. மனிதனை புத்தனாக்குவதும், பித்தனாக்குவதும், சித்தனாக்குவதும் இந்த காதல்தான்! காதலும், கவிதையும் உடன் பிறந்தவை. காதல் என்பது முளைத்து விட்டாலே கூடவே கவிதையும் தோன்றி விடும். காதல் தந்த காப்பியங்கள், நாடகங்கள், பாடல்கள், கவிதைகள் எத்தனையோ. அந்த காதலைப் பற்றி சில வரிகள் இதோ!
அன்று புரிய வில்லை இன்று?
கண் மூடியபின்பும் கண்ணீர் சிந்திய
கவிஞனின் மனநிலை அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது நீந்தத் தூண்டும் நெருப்பாறு என்று.
உணவிலாமல் உணர்வுகளையே உணவாகக்
கொண்ட கவிஞனனின் பசி அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது காயசண்டிகைப் பசி என்று.
தன் நேசத்தையே அதன் நெய்யாக்கி
தூய விளக்கேற்றிய மதிப்பு அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது பிரபஞ்சத்தின் அணையா விளக்கென்று.
உளம் கனிந்து, ஓய்விலாத் தேடுதலை
ஓயாமல் தரும் ஓட்டம் அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது சலிப்பில்லாத சுகமான தேடலென்று.
விவரம் இல்லாமலே தேடுதலின்றியே
விலாசம் வந்த வழி அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது தேவையான அன்பின் முகவரியென்று.
பாக்கள் எழுதி எழுதிப் படைத்த போதும்
பாடல்களின் ஆழம் அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது மூழ்காமலே முத்துத் தரும் கடலென்று.
பாகம்பிரியாள்.
