தமிழ் இலக்கிய இதழ்


கவிதைப் பூங்கா


கால பைரவன்
மல்லை தமிழச்சி


ஒன்பதுமுறை..வலது இடதாய் அசைந்து, நியதிக்குட்ப்பட்ட ஒலியை இசையாய் எழுப்பிய அந்த கடிகாரத்துக்குத் தெரியாது அது இரவு ஒன்பது மணி என்பது. ஆனால் கட்டிலில் உறக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்த ஐஸ்வர்யாவுக்குத் தெரியும் அது இரவு ஒன்பது மணி என்பது. சுழன்று கொண்டிருந்த மின் விசிறியையே வெறித்துக் கொண்டிருந்தவள் தன் அருகிலேயே படுத்ததும் உறங்கிப்போன சௌந்தர்யாவை ஒரு சினேகப் பார்வை பார்ர்த்தாள். நெஞ்சுக்கூடு மிக இசைவான தாளகதியில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது.

ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் ரெட்டைப்பிறவிகள். தன் கையை அவளது நெற்றியின் மேல் வைத்தாள். ஐஸ்வர்யா..சட்டென, கண்களைத் திறக்காமலே, "நான் இன்னும் தூங்கலப்பா.." என்றாள் சௌந்தர்யா. "ம்ம்.. அதான் எனக்குத் தெரியுமே.." என்றாள் ஐஸ்வர்யா. அதே அறையில்..கனிணியில் மும்மரமாய் இருந்த விஷ்ணுபிரியா, "அம்மா உங்களைப் படுத்துத் தூங்கச் சொன்னா ரெண்டு பேரும் கதை பேசிட்டு இருக்கிங்களா? இருங்க..கூப்பிடறேன்" என்றவள் சற்று அவகாசம் கொடுத்து, அறை வாசலுக்கு வெளியே பார்த்து, மிரட்டும் தொனியிலும், அந்தக் குரலிலேயே இருவரும் பயந்து போய்விடவேண்டும் என்கிறமாதிரி, "அம்மா.." என்றாள்.

"கூப்பிட்டுக்கோ... நல்லா கூப்பிட்டுக்கோ.. அம்மா எங்கள ஒன்னும் சொல்ல மாட்டங்களே! நாங்க ஹோம் வொர்க் முடிச்சிட்டோம், பாடமெல்லாம் படிச்சிட்டோம்.. இல்லப்பா.." என்றாள் ஐஸ்வர்யா சௌந்தர்யாவைப் பார்த்து. அவளோ இன்னும் கண்ணைத் திறக்காமலே, "ம்ம்.. ஆமா.. எங்களுக்கு ஒரு பயமும் இல்ல. அம்மாதான் பால் பாயாசம் வச்சிருக்கன். அப்பா வந்தடும் எழுப்பறேன். சாப்பிடுவீங்கன்னு சொன்னாங்க" எனத் தங்களின் விழிப்பை ஞாயப்படுத்தினாள்.

"இந்த அம்மா எங்க போனாங்க?.." எனத் தனக்குத் தானே சலித்துகொண்ட விஸ்ணுபிரியா, "எனக்கு நல்லா வேணுன்டி. உங்களுக்கு முந்திப் பொறந்தேங்கறது பேருக்குதான். ப்ளஸ்டூ படிக்கிற என்னைக் கொஞ்சம் கூட மதிக்கிறதில்ல ரெண்டு பேரும்.."

"கோச்சுக்காதடி விஷ்ணு, நாங்க என்ன உன்ன மாதிரியா? நாலாம் வகுப்புதான் படிக்கிறோம், ஆனா அப்பா சொன்ன மாதிரி உன்னைப்போல ஒத்தையா இந்த உலகத்துக்கு வரல, ரெட்டை தேவதைகளா வந்தவங்களாக்கும்.. தெரிஞ்சிக்க" என வெடுக்கெனச் சொல்லிவிட்டு, நெஞ்சுவரை வைத்திருந்த போர்வையை செயற்கையான கோபத்தோடு போர்த்திக்கொண்டாள். அதே நேரத்தில் கண்களை விழித்து எழுந்து உட்கார்ந்தாள். சௌந்தர்யா, "ஹே, ஏம்பா எங்களை மூட் ஆப் செய்ற? நாங்கதான் அமைதியா படுத்திருக்கோம் இல்ல.." எனக் கெஞ்சலாய்ச் சொல்ல விஷ்ணுபிரியா உடைந்தே போனாள். வேகமாய் எழுந்து சௌந்தர்யாவின் முகத்தைத் தன் இரு கைகளில் ஏந்தி அணைத்து நெற்றியில் முத்தமிட்டவளாய், கண்களில் ஈரம் துளிர்க்க, "நீங்க சின்னப் பிள்ளைங்க இல்லையா? ரொம்ப நேரம் கண் முழிக்கக் கூடாது, அதான்.." என்று..தலையணையில் அவளைச் சார்த்தி மீண்டும் நெற்றியில் முத்தமிட்டு, "தூங்கு, அப்பா வந்ததும் அம்மா எழுப்புவாங்க." நெஞ்சில் கையால் தட்டினாள்.

போர்வைக்குள்ளிருந்து, "அவளுக்கு மட்டும்தான் முத்தம் தருவியா எனக்கில்லையா?" ஐஸ்வர்யாவின் குரல். "கள்ளி.." எனக் கூவிய விஷ்ணுபிரியா போர்த்தியிருந்த நிலையிலேயே ஐஸ்வர்யாவின் தலையைத் தலையணையிலிருந்து உயர்த்தி, அவளது நெற்றியிலும் மொச்சு மொச்சென்று முத்தமிட்டாள். அந்தக் கணம் அவளுக்கு மீண்டும் வாய்க்காத அசுரகணமாய்த் தோன்றியது. பூ மலர்கிற இயல்பில் அவர்களுக்குள் படர்ந்த நேசத்தின் வீர்யம் புரிந்தது. ஐஸ்வர்யா தனக்கும் கிடைத்த நேசத்தின் பங்களிப்பில் சிலிர்ப்புற்று வாய்விட்டுச் சிரித்தாள். அந்தப் படுக்கை அறையே அந்த சந்தோஷ கணத்தில் பூரித்துப்போனது. 'ஆட்டம் போதும், கண்ண மூடித் தூங்கணும், என்ன?" விஷ்ணுப்பிரியா மீண்டும் தன் இருக்கைக்குத் திரும்பி, கனிணியில் நுழையமுனைய,

"அக்கா உங்கிட்ட ஒன்னு கேக்கலாமா.." ஐஸ்வர்யா.

"ம்ம்..கேளு.."

'இன்னிக்கு என்ன கிழமை?"

'ம்ம் நேத்து சனின்னா.. இன்னிக்கு ஞாயிறு.."

"ஆமா, நாளைக்கு திங்கள், அதெல்லாம் எனக்கும் தெரியும். முன்ன எல்லாம் ஞாயித்துக் கிழமை வந்தாலே நாமெல்லாம் கார்ல போவோம். நெறைய இடம் சுத்திப் பார்ப்போம். பீச்சுக்குப் போவோம். கேக்கறதெல்லாம் அப்பா வாங்கித் தருவாரு. இப்பல்லம் ஏங்க்கா அப்பா நம்மள எங்கியும் கூட்டிட்டுப் போறதில்ல?"

விஷ்ணுபிரியாவுக்கு விடை தெரிந்தும் சொல்லத் தோணாமல் தவித்த சில நொடிகளில், "என்னப்பா இப்படிக் கேக்குற, அப்பாதான் காரை வித்துட்டார் இல்ல?" என பதிலிறுத்தாள் சௌந்தர்யா.

"ஆமா பைக்கையும் வித்துட்டாரு, அக்காவுக்கு அவ ஸ்கூல்ல குடுத்த சைக்கிள்லதான் போறாரு, தெரியும், அதான் ஏன்னு கேக்குறேன்" தெரிந்த ஒன்றை வைத்துத் தெரியாத ஒன்றை அறிய நினைக்கும் ஆர்வம் அவளது குரலில்.

"அப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது. ரெண்டு பேரும் ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்கணும். அப்பா அந்தப் பழைய காரை ஏன் வித்தார் தெரியுமா? நமக்கேத்த மாதிரி அது பெரிசா இல்ல, அதான் இப்பப் புதுசா ஒன்னு வாங்கப்போறாரு. நாம எல்லாம் அதுல ஜாலியாப் போகப்போறோம் என்ன?" விஷ்ணுபிரியா மௌஸைத் திருகிக்கொண்டிருந்தவள் கட்டிலுக்காய்த் திரும்பி பதில் சொல்கிறாள்.

ஆமோதித்தோ எதிர்த்தோ எதுவும் சொல்லாமல் ஐஸ்வர்யா சுழலும் மின்விசிறியையே வெறிக்க, இதற்குமேல் பேச்சை வளர்க்காமல், நிலவும் மௌனமான அமைதியையே சாதகமாக்கிக்கொள்ளும் முடிவில் விஷ்ணுபிரியா மீண்டும் கனிணியில் ஆழ்கிறாள்.

விழிகள் கனிணித் திரையில் இருந்தாலும் மனம் பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை அசைப்போடத் துவங்கியது. வகுப்புக்கு வந்த தணிக்கை ஆய்வாளர், "நீங்கள் பின்பற்ற நினைக்கும் உதாரண மனிதர் யார்?" எனக் கேட்டபோது சக மாணவிகள், "காந்தி, நேரு, ஏசு.." என பதில் சொல்ல, விஷ்ணுப்பிரியா உரக்கச் சொன்னாள், "நான் பின்பற்ற நினைக்கும் உதாரண மனிதர் என் அப்பாதான் சார்.."

"அப்படியா! ரொம்ப சந்தோஷம், உங்க அப்பாவப்பத்தி சொல்லேன், நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்."

அதிகப்ப்ரசங்கித் தனமாய் எதையும் பேசி வைக்காதே என்பதுபோல் முறைத்த வகுப்பாசிரியையின் பார்வையையும் மீறி விஷ்ணுபிரியா பேசியது இன்னும்கூட நினைவில் இருக்கிறது அவளுக்கு. " பெரிய படிப்பு எதுவும் படிக்காம, வெறுங்கையோடு கிராமத்திலேர்ந்து சென்னைக்கு வந்து, ஒரு மெக்கானிக் ஷெட்ல கூலியாத் துவங்கி, தனியா ஷெட் வச்சி, கல்யாணம் செஞ்சா ஒரு ஏழைப் பொண்ணத்தான் செஞ்சிப்பேன்னு ஒரே லட்சியத்தோ அனாதை இல்லத்தில ஆதரவு இல்லாம வாழ்ந்த என் அம்மாவக் கைப் பிடிச்சி, தேனி மாதிரி உழைச்சி, படிப்படியா முன்னேறி இன்னிக்கு ஒரு பேக்டரி முதலாளியா, கார், பங்களான்னு நாலு பேருக்கு உதவியா வாழ்ற அவருதான் சார் எனக்கு ரோல்மாடல், முன்னுதாரணம் எல்லாமே."

"குட், உன் அப்பா பேரைத் தெரிஞ்ச்க்ிகலாமா?'

"திரு. கே.எம். வெங்கடாசலம் சார்."

தணிக்கை அதிகாரி பாராட்டியதும் தொடர்ந்து ஆசிரியையும் சக வகுப்பு மாணவியரும் வகுப்பறையே அதிரும் வண்ணம் கரவொலியால் உண்டான பரவசமும் இன்னமும் அவள் மனதில் ஆழமாய் நிலைத்திருக்கிறது. .

தன் நிலைக்குத் திரும்பிய விஷ்ணுப்பிரியாவின் கண்கள் கலக்கத்தில் மனது மட்டும் இன்னும் பல விடை தெரியாக் கேள்விகளுக்கான பதிலுக்காய் அலைகிறது. "ஏம்பா, நம்ம நிலை இப்படியாச்சு? அரிசி வாங்ககூட சிரமப்படற நிலைக்கு ஏன் வந்தோம்? பேக்டரி, வீடுனு அடமானம் வச்சது போதாம, லட்ச லட்சமா கடனாளியா நீங்க ஆக என்ன காரணம்? யாருப்பா உங்கள ஏமாத்தினது? அம்மாவோட நகை, என் நகை, பாப்பாவுங்களுக்கு வாங்கினது எல்லாம் எங்க? இந்தக் கம்ப்யூட்டரைக்கூட வித்திருப்பீங்க. அது படிப்புக்கு உதவுதுன்னுதான் விட்டுட்டீங்க இல்லாயாப்பா?' எனப் பல்வேறு கேள்விகளைத் தனக்குள் எழுப்பியவளாய் கடிகாரத்தைப் பார்த்தாள். பத்து மணி காட்டியது. கட்டிலைப் பார்த்தாள். குட்டிகள் ரெண்டும் நல்ல உறக்கத்தில்..

அறையிலிருந்து என்னவோ நினைத்தவளாய்..எழுந்து நடந்தாள்.

அதற்கெனவே காத்திருந்தவள் போல ஐஸ்வர்யா போர்வையை விலக்கி, கனிணி மேசையை நெருங்கி, அதை ஷட்டவுன் செய்தாள். "எத்தனை முறை நீ இப்படிப் பண்ணியிருப்ப?' எனக் குறும்பான கோபத்தோடு கட்டிலில் படுக்கிறாள். வெளியே விஷ்ணுபிரியா அம்மாவோடு பேசுவதாய் அவளுக்குப் படுகிறது. சமையலறையிலிருந்து இன்னும் அம்மா செய்த பாயாசத்தின் மணம் வந்து கொண்டிருக்கிறது. அப்பா எப்ப வருவாரோ? என்ற கேள்வியோடு ஆயாசமாய்க் கண்மூடுகிறாள்.

வாசலில் நிற்கும் அம்மா தன்னிடம் எதுவும் பேசாமலே இருப்பது விஷ்ணுப்பிரியாவுக்குப் புதிதாய்த்தானிருக்கிறது." அம்மா எனக்கும் தூக்கம் வருதும்மா.."

"போய்ப் படுத்துக்கம்மா" என்கிறாள் அம்மா.

"நீயும் வாம்ம்மா.."

"சொன்னாக் கேளு விஷ்ணு, அப்பா வந்துரட்டும். நான் உங்க எல்லாரையும் எழுப்பறேன் போம்மா.."

"சரிம்மா" என சலித்தபடியே போகும் அவளை அம்மா கூர்ந்து பார்க்கிறாள்.

தெருவில் சந்தடியும் வாகன இரைசலும் படிபடியாய்க் குறையத் துவங்கிவிட்டது. அருகாமை வீடுகளில் இரவு நேரத் தொலைக்காட்சித் தொடர்களின் அரவமும் இசையும்ப் அந்தப் பின்னிரவு நேரத்தின் அமைதியைப் பயன்படுத்தி விகாரமாய் எதிரொலிக்கிறது. இழப்புகளே லாபமாய், வெறுமைகளே சொத்துகளாய், தன் வாழ்வு இப்படியொரு நிலைக்கு வருமென நவமணி ஒருபோதும் நினைத்ததில்லை. தன் கணவன் இன்னும் வராத ஒவ்வொரு நொடியும் அவளைப் பிசைகிறது. ஆயிற்று, தெரு நடமாட்டம் ஓய்ந்தேவிட்டது. பதினோரு மணி இருக்கலாம். எதோ ஒரு சைக்கில் வரும் ஓசை, அவர்தான். நவமணிக்குள் சின்னக் கீற்று.

காம்பவுண்டு கேட்டைத் திறந்து விடுகிறாள். வெங்கடாசலம் சைக்கிளைக் கொண்டு நிறுத்துகிறார். அது அவர்களின் கார் நிற்பதற்காகப் பார்த்து பார்த்துக் கட்டிய போர்டிகோ. சைக்கிளைப் பூட்டுகிறார். சாவியை எடுத்துக்கொண்டு படியேறுமுன் செருப்புகளை உதறுகிறார். ஏதும் பேசாமல் உள் நுழையும் தன் கணவனைத் தொடர்ந்து நவமணியும் கதவைத் தாழிடுகிறாள். சட்டையைக் கழற்றிவிட்டு வெங்கடாசலம் முகம் கழுவிக்கொண்டு வர, துவாலோடு நிற்கிறாள். "பூஜை அறையில விளக்கேத்தும்மா.." சொல்லி நகர்கிறார். ஏற்கனவே பேசிவைத்த மாதிரி அடுத்தடுத்த ஆயத்தங்கள். நவமணி விளக்கேற்றி விட்டு, சமையலறையில் சமைத்து வைத்திருந்த பாயாசப் பாத்திரத்தையும் உள்ளே கொண்டு வைக்கிறாள்.

இருவரும் எதிரெதிர் நின்று கடவுளர் படங்களைத் தொட்டுத் தொட்டு வணங்குகிறார்கள். வெங்கடாசலம் கண்கள் கலங்கிய நிலையில் திருநீற்றை எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்கிறார்.

"ஏன் இவ்வளவு நேரம்?" நவமணி.

"வாங்கப்போனது வெள்ளியா, தங்கமா, விஷ்ம் இல்ல? நான் நேராவும் போய் வாங்க முடியாது"

"அப்புறம்.."

"எப்படியோ, விமோசனம் கிடைச்சாச்சு.." பேண்ட் பேக்கட்ட்டிலிருந்து சின்ன பாட்டிலை எடுத்து மனைவியின் கையில் தந்து, "கலக்கு" என்பதுபோல் தலையசிக்கிறார். அவரிடமிருந்த பதற்றம் எதுவும் நவமணியிடம் இல்லை. பாட்டிலை வாங்கிப் பாயாசத்தில் ஊற்றுகிறாள். சின்னக் கரண்டியால் கலக்குகிறாள். "என்னம்மா யோசிக்கிற? ரொம்பப் பவர், நாக்குல பட்டாப் போதும், வலிக்காது, ஒன்னும் தெரியாது" எனப் பெருங்குரலில் கதறத் துவங்கி சட்டெனக் குரலைத் தாழ்த்துகிறார். தன் சகலமும் ஆன கணவனே கலங்கி நிற்கையில் நவமணியாலும் முடியவில்லை. உடைந்துபோனவள் அப்படியே அவரது நெஞ்சில் சாய்கிறாள். சற்று நேரம் அரற்றியவள் பின் நிதானித்து, கண்களைத் துடைத்தபடி, "சரிங்க, நான் போயி ஐந்து டம்ளர் கொண்டு வந்துடறேன்." எனக் கிளம்ப எத்தனித்த வினாடி, "நவமணி, கொஞ்சம் நாம் பேசணும்" என வெங்கடாசலம் சொல்ல, துணுக்குற்றாள் நவமணி.

"அதான் நாம ஏற்கனவே முடிவு செஞ்சதுதான?"

"இல்ல நவமணி, இங்க வேணாம். வா, மாடிக்குப் போயிருவோம். பிள்ளைங்க விழிச்சுப்பாங்க" கணவர் என்ன சொல்லப்போகிறார் எனப் புரியாமல் மாடிப் படிகளை நோக்கிச் செல்பவரைப் பின் தொடர்ந்தாள்.

மொட்டை மாடியில் ஏதும் பேசாமல் வெறுமனே கைப்பிடிச் சுவரைப் பற்றியபடி நிற்கும் கணவரின் குழப்பம் இன்னதென்று தெரியவில்லை, ஆயினும் அவரது புது முடிவை ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது அவளால்.

"ஏன் நவமணி, எல்லாக் கடனும் என் பேர்லதான் இருக்கு. இதுக்கு எல்லாரும் சாகணுமா, எல்லாத்துக்கும் காரணம் நாந்தான?"

"வாங்கனது நீங்கதான், ஆனா எங்களுக்காகத்தான வாங்கினீங்க?"

"இல்ல, முடிவை நான் மட்டும் தேடிக்கிறதுதான் ஞாயம். நீ பிள்ளைங்கள வழி நடத்து. விஷ்ணு ரொம்ப சூட்டிகையானவ, என் இடத்தில இருந்து அவ எல்லாரையும் கரை சேர்த்துடுவா."

"இப்படித்தான் சொல்லுவீங்கன்னு நெனைச்சேன். நிலைமை கை மீறிப் போனதுக்கப்புறம் ஏன் மாத்திப் பேசறீங்க?"

"எல்லாம் என் கையாலாகத்தனம்."

"நீங்க நாலு பேர நம்புனிங்க, அவங்க ஏமாத்தினாங்க. இதான் நடந்தது. நம்பி ஏமாறுபவர்கள், நம்பினவங்கள ஏமாத்தறவங்க, மீட்டர் வட்டிக்குக் கடனைக் குடுத்துட்டு மொத்தமா அள்ளிட்டுப் போக நினைக்கிறவங்க இவங்களுக்கெல்லாம் பாடமா நம்ம சாவு இருக்கணும்கிறதுதான் நாம செஞ்ச முடிவு? இதுல உங்கள மட்டும் ஞாயப்படுத்திக்க வேணாம். எனக்கும் ஆயிரம் ஞாயம் உண்டு. என்னை நீங்க கல்யாணம் முடிச்சப்ப நீங்க இருந்த இருப்புக்கு நீ, நான்னு கோடீஸ்வரன் கூடப் பொண்ணு கொடுத்திருப்பாங்க. அப்படி சீர் செனத்தின்னு நான் கொண்டுவந்திருந்தாக் கூட உங்க பிரச்சினைக்கு உதவியிருக்கும். வேணுன்னா ஒன்னு செய்வோம். நாம ரெண்டுபேரும்..." என அவள் அடுத்த சொல்லைச் ல்வதற்குள் வெங்கடாசலம் மாடி படிகளைக் காட்டி அவள் வாயை அமர்த்துகிறார். யாரோ வரும் ஓசை, யாரது?

இருவருமே எதிர்பாராத தருணத்தில் அங்கே வந்தவள் விஷ்ணுபிரியா.

"இங்க என்னப்பா செய்றீங்க?"

"ஒன்னுமில்லம்மா, ஒரு முக்கியமான விஷயம், அதான்.."

"ஓ.. ரெண்டு பேரும் பேசி முடிவெடுக்கிறீங்களா, எடுத்துட்டீங்களாப்பா?"

".........."

"என்னப்பா பார்க்கிறிங்க? எனக்கு எல்லாம் தெரியும்பா. நீங்க வந்த நிமிஷத்துல இருந்து கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன்.."

"அது ஒன்னுமில்லடா.. விஷ்ணு.."

"போதும்பா, சாவுதான் தீர்வுன்னு ஆனப்புறம் பாயசம் என்னப்பா? எனக்கு அப்படியே குடுங்கப்பா, குடிக்கிறேன்"

"அய்யோ மகளே!" என அவளைக் கட்டி அணைத்து, "நல்லாச் சொல்லும்மா அவ்ருக்கு" என்ற தன் தாயிடம், "நீ ரொம்ப நல்லவ, நீ பேசினதையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்."

"விஷ்ணு, நீ சின்னப் பொண்ணுடா, உனக்குப் புரியாது.."

"புரியும்பா, நீங்க என்னை அப்படி வளக்கல. ஐஸும் சௌந்த்ர்யாவும் பொறந்த நேரந்தான் நம்ம கஷ்டமெல்லாம் அப்படிங்கிறதையே நான் வேற மாதிரிப் பார்க்கிறேம்பா. நம்மகூட வந்து பொறந்த நேரந்தாம்பா அவங்க இப்படித் துன்பப்படறாங்க. ஒன்னு எல்லாரும் வாழற முடிவோட் கீழ வாங்க. இல்ல வேற முடிவுதான்னா உங்களோட என்னையும் சேர்த்துக்கோங்க"

விதிர்விதிர்த்துப் போன வெங்கடாசலம், "அய்யோ! விஷ்ணு மகளே" எனக் கலங்க, "அப்பா, நீங்க என் ரோல் மாட்ல்ப்பா"

"இல்லடா, அது ஒரு மாயை,. நான் ஏமாந்துட்டேன்"

"இல்லப்பா, அது நிஜம். உங்கள ஏமாத்துனாங்க, நீங்க ஒத்தையா உழைச்சுதுக்கே இவ்ளோ உயருவீங்கன்னா உங்ககூட நானும் இருக்கேம்பா"

"கண்ணத் தொறந்த மகளே, என் கண்ணத் தொறந்த. இந்த ஒரு வார்த்தை போதுண்டா, இந்த உலகையே நான் ஜெயிப்பேன்" என விஷ்ணுவை ஆரத்தழுவி அவர் அழுவதையும் பொருட்படுத்தாது தன் மகளின் தைரியத்தை எண்ணிப் பூரிக்கிறாள் நவமணி.

"பூஜை அறியில் இருக்கற அந்த சனியன எடுத்துக் கொட்டிட்டு..சாப்பாடு எடுத்து வைம்மா, எல்லோரும் சாப்பிடுவோம்"

வெங்கடாசலத்தின் வாயிலிருந்து வார்த்தை வந்ததுதான் தாமதம், நவமணி ஓட்டமெடுத்தாள்.

படிகளில் இறங்கி.. போர்டிகோவைக் கடக்கையில், "அப்பா, இதே இடத்தில நம்ம கார் நிக்கும்பா. நிச்சயமா நாம் இழந்ததெல்லாம் நமக்கு வந்து சேரும்பா. நீங்க போயி இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா?" என்ற அவளின் தலையில் கையை வைத்து ஆசீர்வதிப்பதுபோல் தொட்டார். உள்ளேயிருந்து பெருங்குரல், "என்னங்க, நாம மோசம் போயிட்டொம்ங்க, அய்யோ! சீக்கிரமா இங்க வாங்களேன்." நவமணியின் அலறல்.

குரல் வந்த பூஜை அறையை நோக்கிப் போகிறார்கள்.

கிழக்கும் மேற்குமாய், திறந்த வாசல் வழி இரண்டுஜோடிப் பிஞ்சுக் கால்கள். இன்னும் நெருங்க.. ஐஸ்வர்யாவும்..சௌந்த்ர்யாவும்..உயிரற்ற வெற்று உடல்களாய்.. அக்கம் பக்க வீடுகளில் வெளிச்சம் முளைக்க.. ஆள் அரவம் திரள..

இந்த மரணமும் பணவெறி பிடித்த மீட்டர்வட்டிக் காரர்களுக்குப் பாடந்தான், ஆனால் ஒரு தாய்க்கு, தந்தைக்கு, அக்காவுக்கு...

நிம்மதியைக் குலைத்து விரட்டும் வாழ்க்கையைக் கல்லெடுத்து விரட்டத் துணியாதவர்களை சமயங்களில் காலபைரவன் இப்படித்தான் கடித்துக் குதறிவிடுகிறான்.